புதுடெல்லி: வரும் 2026க்குள் நக்சலைட்டுகள் அட்டூழியம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு விதித்ததை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 4, ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சட்டீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டிஜிபிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை ஒழிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக இறுதி கட்ட தாக்குதலை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎப்) 4 பட்டாலியன்கள் சட்டீஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில் ‘‘பீகார்,ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இதையடுத்து ஜார்கண்டில் இருந்து 3 சிஆர்பிஎப் பட்டாலியனும்,பீகாரில் இருந்து ஒரு பட்டாலியன் வீரர்களும் சட்டீஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பட்டாலியனிலும் 1000 வீரர்கள் இருப்பார்கள். இந்த வீரர்கள் தண்டேவாடா, சுக்மா,பஸ்தார் மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் எல்லைகளில் நிறுத்தப்படுவார்கள்’’ என்றனர்.