திருவனந்தபுரம்: சபரிமலையில் டோலிக்கு ப்ரீபெய்ட் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் டோலி தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் டோலியில் செல்ல வேண்டிய பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். டோலி தொழிலாளர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் கூறியது: சபரிமலையில் டோலிக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது குறை இருந்தால் மண்டல காலம் தொடங்குவதற்கு முன்பே தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.
பல பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டுத் தான் சபரிமலைக்கு வருகின்றனர். இதுபோன்ற திடீர் வேலை நிறுத்தத்தால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். புனிதமான சபரிமலையில் இத்தகைய தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வரும்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே பல அதிகாரிகள் சபரிமலையில் பெரும் சிரமத்திற்கிடையே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
புல் மேடு பாதை மீண்டும் திறப்பு
கனமழையைத் தொடர்ந்து குமுளியிலிருந்து முக்குழி, சத்ரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்லும் வனப்பாதை 2 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் இந்தப் பாதையில் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 581 பக்தர்கள் இந்த வழியாக சபரிமலைக்கு சென்றனர்.