பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யுடியூப், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்கள் வரிசையில் டெலிகிராம் என்ற செய்தி பரிமாற்ற செயலியும் மிகவும் பிரபலமானது. துபாயை தளமாக கொண்ட டெலிகிராம் செயலியை ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ்(39) என்பவர் நிறுவினார். இதுகுறிப்பாக ரஷ்யா, உக்ரைன், சோவியத் யூனியன் குடியரசு நாடுகளில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாவெல் துரோவ் பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை அஜர்பைஜானில் இருந்து பிரான்சின் போர்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பாவெல் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
“டெலிகிராம் செயலியில் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வது, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல், சிறார்களுடன் தொடர்புடைய பாலியல் சுரண்டல் தொடர்பான செய்திகளை பகிர அனுமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டார்” என பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.