டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.
புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆனால் ஜாமீன் நிபந்தனைகளாக முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது, முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் நேற்று முன் தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், செப்டம்பர் 17-ந் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு துணை நிலை ஆளுநரை சந்தித்து தமது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்குவார். அப்போது சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கப்படும். இதனை ஆளுநர் ஏற்க மறுக்கும் நிலையில் புதிய முதல்வர் அதிஷி தேர்வு குறித்த முடிவு அவரிடம் தெரிவிக்கப்படும். இதன் பின்னர் புதிய முதல்வர் அதிஷி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவரங்கள் வெளியாகும்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் 3ஆவது பெண் அதிஷி மர்லேனா ஆவார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்க உள்ளார்.