வாஷிங்டன் : முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இந்திய நேரப்படி சுமார் 11.30 மணி அளவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது மறைந்து இருந்த நபர் ஒருவர், ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அதை அறிந்த பாதுகாப்புப் படை வீரர்கள், உடனடியாக ட்ரம்பை அருகில் இருந்த அறைக்குள் கொண்டு சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்க உளவுப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோபிடன்,”அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோல்ப் விளையாடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து மத்திய சட்ட அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரம், முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதி அளிக்கிறது. நான் கூறுவது போல் அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. ட்ரம்பிற்கு தேவையான உரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் துணை அதிபர் கமலா ஹாரீஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,”அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை . டொனால்டு டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.