சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் முதல்வர் பேசியிருப்பதாவது: வணக்கம். நலமா? மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் சகோதரிகள் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகிறார்கள். தாய்வீட்டு சீர் மாதிரி எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திர சீர் என்று எந்நேரமும் தமிழ் சகோதரிகள் மனம்மகிழ சொல்றாங்க. அது தான் விடியலின் ஆட்சி.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்துக்கு தான். இந்த விடியல் பயணமானது.மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது.அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வியைப் பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாச உணர்வுதான் முக்கியம். அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர்தின வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.