சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’40/40 தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம் வெளியீடு செய்யப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024 -40/40 திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பெற்று கொண்டார்.
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடந்த போர்தான் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல். “400 இடங்களை கைப்பற்றுவோம்” என சொன்ன பா.ஜ.க.வை தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியது இன்டியா கூட்டணி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த பிரதமர் மோடியை, அண்ணல் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசன சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறது தி.மு.க. அங்கம் வகிக்கும் இன்டியா கூட்டணி.
தமிழ்நாடு புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்கிற வரலாற்று வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றது. அந்த சரித்திர சாதனையை ஆவணமாக பதிவு செய்கிறது முதல்வர், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய “40/40 தென் திசையின் தீர்ப்பு புத்தகம்” இந்நூலினை சென்னை கலைஞர் அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. பெற்றுக் கொள்கிறார்.
பின்னர் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கூறியதாவது
நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம்.
அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.
அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என்று கூறினார்.