நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘விவசாய சங்கத் தலைவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்தேன்.
அதற்கான அனுமதியும் முதலில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவர்களை இங்கு (நாடாளுமன்றத்தில்) அனுமதிக்கவில்லை. அவர்கள் விவசாயிகள் என்பதால், உள்ளே அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்வது? இதுதான் பிரச்னை. தொழில்நுட்ப பிரச்னையும் இருக்கலாம்… பார்ப்போம்’ என்றார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் தொடங்கிய டெல்லி நோக்கிய 2வது பயணம் அரியானா எல்லைகளில் நிறுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்தன.
விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதா கொண்டு வர வலியுறுத்தவும், அதற்காக ராகுலை சந்திக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.