பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதிஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிக்கிறார்கள். அதே சமயம் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின்னர் முதல் நிதிஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக்கின் 9 வது ஆட்சி மன்றக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான விக்சித் பாரத் 2047 என்ற ஆவணம் குறித்து விவாதிக்கப்படும் என்று மூத்த ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆனால் ஒன்றிய அரசு கடந்த 23ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவது இல்லை என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து விட்டார்.
அதே போல் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர்சிங் சுக்கு ஆகியோரும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவது இல்லை என்று தெரிவித்து விட்டனர். அந்த வரிசையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக முடிவு செய்து அறிவித்து விட்டனர்.