வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ‘டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில்’ என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவருக்கு 52 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியினருக்கும், குடியரசுக் கட்சியினருக்கும் சமபங்கு ஆதரவு ஏழு மாநிலங்களில் உள்ளதாகவும், பென்சில்வேனியாவில் மட்டும் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த கணக்கெடுப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வந்தார். கமலாவுக்கு 54 முதல் 56 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 முதல் 46 சதவீத ஆதரவும் இருந்தது. இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே டிரம்புக்கு ஆதரவு பெருகி வருவதால், வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.