டெல்லி: தாழ்த்தப்பட்ட (பட்டியலினம்) மற்றும் பழங்குடியினர் பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளடங்கிய பல்வேறு மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு முடிவுகளுக்கு எதிரான 20 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது.
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தலித்துகளுக்கான (பட்டியலினம், எஸ்சி) 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர் ஜாதியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது. இந்த உள் இடஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சேலம் யசோதா ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல பஞ்சாப் மாநிலமும் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒ ஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதற்கு எதிரான வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஹரியானா மாநிலத்திலும் இதேபோல ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது. இப்படியான மொத்தம் 20 மனுக்களை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்குகளை 2020-ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு என கருத்து தெரிவித்தது. அத்துடன் இடஒதுக்கீடு கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதைப் போலவே உள் இடஒதுக்கீடு வழங்கவும் அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பெஞ்ச் கூறியிருந்தது.
அதே நேரத்தில் இ.வி. சின்னையா மற்றும் இந்திரா சாஹ்னே வழக்குகளின் தீர்ப்புக்கும் தற்போதைய தீர்ப்புக்கும் பொருத்தம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டன.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளில் 6 பேர், பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கான 3% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது என அதிரடியாக தீர்ப்பளித்தனர். மேலும் இத்தகைய உள் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் 6 நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் பெஞ்ச்சில் நீதிபதி பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.