காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 3 தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறவும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றான பஹல்காம் மாவட்டத்தின் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இக்கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் இருந்து தப்பிய சுற்றுலா பயணிகள் அளித்த தகவல்கள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் வரைபடங்களை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.
அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாசவேலையின் பின்னணியில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.