கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில் மீது பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலூச் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதே நேரத்தில் தண்டவாளத்தின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால், ரயில் தடம் புரண்டது. ரயிலில் துப்பாக்கிகளுடன் ஏறிய கிளர்ச்சிபடையினர், அதில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளையும் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளனர். பிணை கைதிகளில் ராணுவ வீரர்கள், போலீசார் மட்டும் 100 பேர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ராணுவ வீரர்கள் 6 பேரை சுட்டுக்கொன்றுள்ள கிளர்ச்சி படையினர், ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.