சென்னை: “கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.” என இபிஎஸ் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் இல்லத் திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின், பி.எஸ்.திலீபன் – விஷாலி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மீனவ சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் கே.பி.பி. சாமி. கே.பி.பி. சாமி வழியில் மீனவர்கள், மற்றும் திருவொற்றியூர் தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடுபவர் கே.பி.சங்கர்.
மக்கள் எளிதில் அணுகும் பிரதிநிதியாக இருந்து சிறப்பாக பணியாற்றி வருபவர் கே.பி.சங்கர். சிறையில் இருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.பி.சங்கர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழா| நடந்தது போன்று வேறு எந்த விழாவும் இந்தியாவில் நடந்ததில்லை. கலைஞரின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் சென்று பார்வையிட்டார். கலைஞரின் பெயரால் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தலைவர் கலைஞர் பெயரில் கிண்டியில் உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது; அதை எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்க மாட்டார். அண்ணாவுக்கு நாணயம் வெளியிட்டபோது அவருடைய தமிழ் கையெழுத்து இடம்பெறச் செய்தார் கலைஞர். கலைஞர் வழியில் அவருக்கு நாணயம் வெளியிட்டபோது அவருக்கு பிடித்த வார்த்தையான தமிழ் வெல்லும் என்ற வார்த்தை சேர்கப்பட்டுள்ளது. தமிழ் வெல்லும் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை பார்க்க கூட மனமில்லாத பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக வாய்த்திருக்கிறார். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுலை அழைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது ஒன்றிய அரசு, திமுக அல்ல. ஒன்றிய அரசு நாணயத்தை வெளியிட்டதால்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து விழா நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். நாணய வெளியீட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. ஒன்றிய அமைச்சர்கள் வர மறுத்துவிட்ட காரணத்தால்தான் எடப்பாடி பழனிசாமியே எம்.ஜி.ஆர். நாணயத்தை வெளியிட்டார். ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம்கூட நடத்த முடியாதவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி பேச தகுதியற்றவர்கள். ஜெயலலிதா மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு இரங்கல் கூட்டத்தையாவது நடத்தியுள்ளார்களா?.
பா.ஜ.கவுடன் எந்த ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ராஜ்நாத் சிங்கை அழைத்து விழா நடத்தியதால் பாஜக-வுடன் திமுக ரகசிய உறவு என்று பழனிசாமி கூறியுள்ளார். திமுக எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அந்த நிலைப்பாட்டில் வெளிப்படையாகவும் உறுதியுடனும் இருக்கும். தமிழ்நாட்டுக்கான உரிமைகளை எக்காரணத்தை கொண்டும் |திமுக விட்டுக்கொடுக்காது என்றும் கூறினார்.