எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவைச் சேர்ந்த 26 வயதான நடா ஹஃபீஸ், முன்னாள் தேசிய கல்லூரி தடகள சங்கத்தின் சாம்பியனான அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை தோற்கடித்து அவருக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அடுத்த சுற்றில் தென் கொரியாவின் ஜியோன் ஹயோங்கிடம் தோல்வியைத் தழுவினார்.
இதுகுறித்து எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், போட்டிக் களத்தில் இரண்டு பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் இங்கிருப்பது மூன்று பேர்!. ஆம்..நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை! என தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.