சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்தன.
அதன்படி, பெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிவாரண தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.