மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும். திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உடமைகளை பத்திரப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறந்து விடப்படலாம் என்ற நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.