கடலூர்: அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவும், செலவு பண்ணக்கூடியவங்க நீங்க.. பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாடு ஐந்தாயிரம் கோடியை இழக்கிறது என்று சொல்கிற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே.. தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக்கொண்டிருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல.. எங்களுக்கு ஒரு நொடி போதும்.. மறந்துடாதீங்க.. ஆனால் கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம்.. அதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவும், செலவு பண்ண கூடியவங்க நீங்க.. பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாடு ஐந்தாயிரம் கோடியை இழக்கிறது என்று சொல்கிற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே.. தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல.. எங்களுக்கு ஒரு நொடி போதும்.. மறந்துடாதீங்க.. ஆனால் கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம்.. அதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதைக்கூட புரிந்து கொள்ளாதவர்கள், ஒன்றியத்தை ஆள்வது தான் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாபக்கேடு.. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியை வளர்ப்பதற்காக கொண்டுவரப்படவில்லை..
இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது.. நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்பதால், கல்விக்கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள்.. தாய்மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்.. தர்மேந்திர பிரதான் அவர்களே.. தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும்.. இந்தி மொழியால் தாய் மொழியை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள்.. உங்களின் சதித்திட்டத்தின் ஆபத்து புரியும்..
நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று ‘தமிழ்’ உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை.. ஒன்றிய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன்.. தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்.. தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க ஆசைப்படாதீங்க.. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளையும் நான் இருக்கும் வரைக்கும், திமுக இருக்கும் வரைக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிற வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது..
நமது திராவிட மாடல் அரசை பொறுத்த வரைக்கும்.. மக்கள் முன்னேற்றம் ஒரு பக்கம் என்றால், அதற்கான தடைகளை உடைப்பது ஒரு பக்கம் என இரு பாய்ச்சலாக செயல்படுகிறது. இதுபோன்ற தடைகள் வருவது புதிது அல்ல.. ஆனால் இது போன்ற தடைகள் எந்த பக்கம் இருந்து வந்தாலும் அதனை உடைப்போம்.. அதனால் வெற்றிப்பாதையை தொடர்கிறோம்..”
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.