சென்னை : திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகளை வழங்கினார்.
அரசு பள்ளியில் இருந்து சென்னை, பெங்களூரு, உ.பி., மலேசிய, தைவான் பல்கலைக்கழகத்திற்கு 447 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். மேலும் டிஎன்பிஎஸ்சி மூலம் பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான 448பேருக்கு முதல்வர் பணி ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர்.
வாய்ப்பு கிடைத்தால் மாணவர்கள் எந்த உயரத்தையும் எட்டிப் பிடிப்பார்கள். தமிழ்நாட்டின் அறிவுச் சொத்துகளாக மாணவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு மாணவர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் சேர ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளனர்.
14 மாணவர்கள் தைவான், ஜப்பான், மலேசியா கல்வி நிறுவங்களில் சேரவுள்ளனர். உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். விண்வெளியில் கூட தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இனி ஆதிக்கம் செலுத்துவார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இனி அனைத்துத் துறைகளிலும் சாதனை படைப்பார்கள். படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்