அமெரிக்காவின் அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு உயர் பதவிகள் மற்றும் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
அப்போது அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ‘வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக நிகழ்த்தி காட்டியதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவி வரும் இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டுகள். திபாவளி கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.
அமெரிக்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், துணை அதிபர் கமலா ஹாரிஸ், நேற்றைய தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியவில்லை.
இதற்கிடையே, பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வீடியோ வாயிலாக தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு இந்தியர்கள் ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை பாராட்டி பேசியுள்ள அதிபர் ஜோ பைடனுக்கு சுனிதா நன்றி தெரிவித்துள்ளார்.