இஸ்லாமாபாத்: வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் பின்னணியில் சீனாவின் துணை நிதியமைச்சர் லியாவ் மின்னை பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் சந்தித்து பேசினார்.
அப்போது,நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கடன் வரம்பை 5.6 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதை சீனா ஏற்று கொண்டால் பாகிஸ்தானுக்கான மொத்த கடன் தொகை வசதி 5.7 பில்லியன் டாலராக அதிகரிக்கும்.
பாகிஸ்தான் அதிக கடன் வரம்பை கோருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதுபோல் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் சீனா நிராகரித்துள்ளது. சீனப் பிரதமர் லீ கியாங்கின் சமீபத்திய பயணத்தின் போது பாகிஸ்தானும் சீனாவும் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போது பாகிஸ்தானுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை 2027ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக சீனா அறிவித்தது.