2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக நீடிக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் திருமாவளவன்,”திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் விசிக இல்லை. திமுக கூட்டணியில் தொடர்வது என்ற உறுதியான நிலைப்பாட்டில் விசிக உள்ளது. வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை எதுவும் எங்களுக்கு இல்லை.
விஜய் உடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு ஓராண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார் என்று கூறியதன் அடிப்படையில்தான் விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருந்தேன். பின்னர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று கூறினார்கள்; விஜயை அழைக்க உள்ளதாக த.வெ.க. மாநாட்டுக்கு முன்பு கூறினார்கள். தற்போது விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தும் உரிய முடிவு எடுக்கப்படும். கூட்டணி விவகாரத்தில் வி.சி.க. ஊசலாட்டத்தில் இருப்பதாக அவதூறு பரப்புகிறார்கள். வி.சி.க.வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். யாரோ எவரோ போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி வி.சி.க. மீது சந்தேகத்தை எழுப்புவது ஏற்புடையதல்ல. திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை! எங்களுக்கு இல்லை.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் வி.சி.க.வுக்கும் பங்கு உண்டு.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எங்கள் கூட்டணி; இந்தியா கூட்டணி உருவானதிலும்-விசிகவுக்கு பங்கு உள்ளது.,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.