புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்டதால் கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் திரும்ப பெற தொடங்கி உள்ளன. வரும் 29ம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியையும் அபகரிக்க முயல்கிறது. இதனால் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவத்துக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

Will Effectively Implement Solution': China Confirms Breakthrough In  Resolving Eastern Ladakh Standoff With India

இதன் தொடர்ச்சியாக இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா – சீனா எல்லை பிரச்னை நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங், டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டு வீரர்களை நிறுத்தி வந்தனர்.

இதனால் இருநாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டதால் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இருநாடுகளுக்குமான எல்லைப்பகுதி இதுவரை துல்லியமாக வரையறுக்கப்படாததால், எல்ஏசி என்ற எல்லைக்கட்டுப்பாட்டு கோடு நிர்ணயிக்கப்பட்டு, அங்கு இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டு வீரர்களை ரோந்து பணியில் நிறுத்தி வந்தனர். இந்தியா, சீன வீரர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்த காரணத்தால் இருநாடுகளிடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் நிலவி வந்தது.

இருநாடுகளிடையேயான எல்லை பிரச்னையை தீர்க்க கடந்த 4 ஆண்டுகளாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் ஒருபயனும் ஏற்படவில்லை. கிழக்கு லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த 21ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய வௌியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா – சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்னைகளை தீர்ப்பது குறித்து கடந்த பல வாரங்களாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் ராணுவம் மீண்டும் ரோந்து செல்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

How India and China pulled back from a border war — and why now

இந்தியாவின் கருத்தை சீனாவும் உறுதிப்படுத்தி இருந்தது. கடந்த 22ம் தேதி பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான், “இந்திய – சீன எல்லை விவகாரத்தில் அண்மை காலங்களில் இருநாடுகளும் ஒரு தீர்மானத்தை எட்டி உள்ளன. அதை செயல்படுத்த இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா சென்ற பிரதமர் மோடி அங்கு காசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

அப்போது, “பரஸ்பர மரியாதை மற்றும் முதிர்ச்சியை வௌிப்படுத்துவதன் வாயிலாக இருநாடுகளும் நிலையான உறவை பராமரிக்க முடியும். இந்தியா – சீனா எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் உறுதிப்பூண்டனர். பிரிக்ஸ் மாநாட்டு சந்திப்பின் தொடர்ச்சியாக இருநாட்டு ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள தங்கள் வீரர்களை விலக்கி கொள்ளும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

அதன்படி கிழக்கு லடாக்கில் தெப்சாங் பகுதியில் உள்ள ஒய் சந்திப்பு மற்றும் தெம்சோக்கில் உள்ள சார்டிங்நுல்லா சந்திப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த இந்தியா, சீனா வீரர்கள் பின்வாங்கி தங்கள் வழக்கமான முகாமிற்கு திரும்ப தொடங்கி உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் இருநாட்டு வீரர்கள் தங்க அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களை அகற்றும் பணிகளும் தொடங்கி உள்ளன. ராணுவ உபகரணங்கள், வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

India, China begin troop disengagement in Eastern Ladakh, withdraw military  equipment – India TV

வரும் 29ம் தேதிக்குள் இந்த நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்து வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும், சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தியா – சீனா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றமாக கருதப்படுகிறது.

* இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

* இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதனால் கிழக்கு லடாக்கில் இருநாடுகளும் தங்கள் வீரர்களை நிறுத்தி வந்தனர்.

* 4 ஆண்டுகளுக்கு பிறகு பிரச்னை முடிவுக்கு வருகிறது. அக்.29ம் தேதிக்குள் இருநாடுகளும் படைகளை விலக்க முடிவு செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *