புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடந்தது. மாநிலங்களவையில் விவாதத்தின்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் எந்த வாயில் அல்லது வளாகத்தில் எங்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கேள்வி நேரத்துக்கு பதிலாக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா 2024, யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகியவற்றை நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். கூச்சல், குழப்பங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.