புதுடெல்லி: துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல் சாசன முறைப்படி தமிழ்நாடு அரசிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுடன் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவது நீடிக்கிறது.

Governor is defying Supreme court': 3-Judge bench led by CJI on Tamil  Nadu's RN Ravi - The South First

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டன. மேலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்திலும் கடந்த வாரம் ஒரு புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவை அனைத்தையும் கடந்த 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இருந்து ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும்.

இல்லை என்றால், வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிப்ரவரி 4ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன், மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், துணை வேந்தர் நியமனம் தொடர்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதத்தில், “கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்பட்ட மொத்த 12 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வரையில் 10 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். சில மசோதாக்களை மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கிறார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டால் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். ஒரு மாநில சட்டப்பேரவை மூலம் முடிவெடுக்கப்பட்ட மசோதாவில் குடியரசுத் தலைவர் எப்படி முடிவை மேற்கொள்வார். குறிப்பாக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசை பழி வாங்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்ற அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுக்கிறார். உள்நோக்கத்துடன் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர் நினைத்தால் மசோதாவை திருப்பி அனுப்பலாம் என்று நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் மசோதாக்களை ஆண்டு கணக்கில் நிலுவையில் வைத்திருப்பதன் மூலம், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மசோதாவை நிறைவேற்றட்டும், நிராகரிக்கட்டும் அல்லது திருப்பி அனுப்பட்டும். ஆனால் நிலுவையில் வைத்து மாநில அரசை வஞ்சிக்க கூடாது. இது மக்களுக்கு செய்யும் துரோகம். ஆளுநர் அதனை சிறுதளவும் நினைத்து பார்க்கவில்லை. ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர். ஆளுநர் தேவையா என்று வாதங்கள் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணமாக இது இருக்கிறது.

சட்ட விதிகளின் அடிப்படையில் ஆளுநர் முதல் தடவையே மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். அல்லது அரசின் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனால் அரசுக்கு அனுப்பி விட்டு, அதை மீண்டும் ஆளுநருக்கே அரசு அனுப்பினால், அவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். இந்த விவாகரத்தில் ஆளுநருக்கு மூன்றாவது வாய்ப்பு என்று எதுவும் கிடையாது.

அரசியல் சாசனப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2023ம் ஆண்டு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதனை அறிந்த பின்னரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்யும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆளுரின் இந்த செயல் அரசியல் சாசனத்தை கேலிக் கூத்தாக்குவதாக உள்ளது. குறிப்பாக அரசியல் சாசனம் கால நிர்ணயம் செய்யவில்லை என்பதற்காக ஆளுநர் முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. எந்தளவுக்கு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசன விதிமுறைகள் தெளிவாக தெரிவித்துள்ளது. அந்த வார்த்தையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்று நினைக்கிறோம்.

மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவின் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு தகவல் அனுப்புகிறார். இதன் அர்த்தம், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்துக்கு போய்விட்டது என்பது ஆகும். இது அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். சட்டவிதி 200ன் அடிப்படையில் ஆளுநர் மூன்று விவகாரத்தைதான் செய்ய முடியும். அதாவது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது அல்லது திருப்பி அனுப்புவது மட்டுமே. ஆனால் இந்த வழிமுறைகளை பின்பற்றாமல், எந்த காரணத்தையும் கூறாமல் மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டு வைப்புது சட்ட விரோதம்.

இதுபோன்ற ஒரு வழக்கில் பேரவையில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனை கிடப்பில் போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இதுபோன்ற தாமதமான செயல்பாடுகளால் பத்து பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் சிரமமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நடந்த இதே மாதிரியான வழக்கு விசாரணையில், தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இருதரப்பும் அமர்ந்து பேசி சமரசமான முடிவுக்கு வாருங்கள் என உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைக்கு மதிப்பளிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வரும் செயல்பட்டார்.

ஆனால் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து முரண்டு பிடிக்கும் விதமாக நடந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதனை நாங்கள் குற்றச்சாட்டாகவே உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கிறோம். தொடர்ந்து நீதிபதிகள், “குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மசோதாக்களை அனுப்பி வைத்து விட்டார் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். அதில் என்ன நிவாரணம் வழங்க முடியும். ஆளுநர் ஏன் மசோதாக்களை அவரே முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது ஏன்? இரண்டாம்முறையாக ஆளுநரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியுமா?

ஆளுநர் மசோதாவை அரசுக்கும் அனுப்பாமல், குடியரசு தலைவருக்கும் அனுப்பாமல், ஒப்புதலும் அளிக்காமல் வைத்திருக்க முடியுமா? ஒருவேளை மசோதா சரியாக இல்லை என ஆளுநர் கருதினால் என்ன செய்வது?” என்று சரமாரி கேள்வியெழுப்பினர். அப்போது குறுக்கிட்ட முகுல் ரோத்தகி, “அப்படி அவர் இருக்கவே முடியாது. ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். அதுதான் சட்ட விதியாகும் என்று பதிலளித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (நாளை) ஒத்தி வைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அன்றைய தினம் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்களை நிறைவு செய்த பின்னர், ஆளுநர் தரப்பில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர், ஆளுநர் எதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என்பது குறித்த வாதங்களை முன்வைப்பார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் அவகாசம் உள்ளது. அதற்குள் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம், ஆளுநர் பேசி முடிவெடுக்க வேண்டும்என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

* ‘சூப்பர் சி.எம்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *