விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது ராஜிவ்காந்தி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது. அதேநேரத்தில் 4 வழக்குகளுக்கு தினமும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கினால்தான் போகிற போக்கில் என்ன பேசுகிறோம் என்பது சீமானுக்கு தெரிய வரும் என்றும் நீதிபதி கடுமையாக கூறினார்.

Seeman suggests Deputy CM role for Duraimurugan - The Hindu

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என்று பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் மீது போடப்பட்டது அரசியல் ரீதியான வழக்கா, இல்லையா? என்பது கடந்த 6 மாதங்களாக அவர் பேசும் பேச்சில் இருந்தே தெரிய வந்துள்ளது. அவர் மற்றவர்களை கோபப்படுத்தும் விதமாகத்தான் தினமும் பேசி வருகிறார்.

இப்படி பேசினால் அவர் மீது புதுப்புது வழக்குகளை போலீசார் பதிவுதான் செய்வார்கள். பேச்சுரிமையை அரசியல் அமைப்பு சாசனம் கட்டுப்பாடுகளுடன்தான் வழங்கியுள்ளது. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர், விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, 4 வழக்குகளுக்கு தினமும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கினால்தான் போகிற போக்கில் என்ன பேசுகிறோம் என்ற நிதானம் அவருக்கு வரும் என்று கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *