இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் 21 மாதங்களாக கலவரம் நடந்துவரும் சூழலில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய முதல்வர் பிரேன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக பிரேன்சிங் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன . தற்போது பிரேன் சிங்கை மாற்றவேண்டும் என பாஜ எம்எல்ஏக்கள் 12 பேர் கோரிக்கை விடுத்த சூழலில் நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. கொறடா உத்தரவை மீறி பிரேன் சிங் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்எல்ஏக்கள் வாக்களிக்க கூடும் என்பதால் முதல்வர் பதவியை சட்டப்பேரவை கூடும் முன்பே பிரேன் சிங் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், புதிய முதல்வரை பாஜ நியமிக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. மணிப்பூர் மாநில பா.ஜ பொறுப்பாளர் சம்பித் பத்ரா மணிப்பூரில் முகாமிட்டுள்ளார். புதிய முதல்வர் பட்டியலில் அமைச்சர்கள் யும்னம் கெம்சந்த் சிங், விஸ்வஜித் சிங், சபாநாயகர் சத்யபிரதா சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. நேற்று மணிப்பூர் ஓட்டலில் பா.ஜ எம்எல்ஏக்களை சம்பித் பத்ரா ரகசியமாக சந்தித்து பேசினார். மேலும் அடுத்தது பா.ஜ எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு புதிய முதல்வர் தேர்வா அல்லது ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பதா என்பது தெரிந்து விடும். ஜனாதிபதி ஆட்சிக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.