லண்டன்: எய்ட்சை கட்டுப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் (யுஎன்எய்ட்ஸ்) நிர்வாக இயக்குனர் வின்னி பையனிமா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் எய்ட்ஸ் தொற்றுகள் குறைந்து வருகின்றன. 2023ம் ஆண்டில் 13 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகியிருந்தன. இது 1995ம் ஆண்டில் இருந்து பார்க்கும் போது 60 சதவீதம் குறைவாகும். அனைத்து வெளிநாட்டு நிதி உதவிகளும் 90 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு எய்ட்ஸ் தடுப்பு பணிகளுக்கான நிதியில் 90 சதவீதத்தை அமெரிக்கா அளிக்கிறது.
அமெரிக்க அரசு சுமார் ரூ.3500 கோடி உதவி அளிக்கிறது அவருடைய அறிவிப்பால் 2029க்குள் நோய் பாதிப்பு 6 மடங்கு அதிகரிக்கும். 87லட்சம் பேருக்கு புதிதாக தொற்றுகள் ஏற்படும். 63 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்பினால் உயிரிழப்பர். 34 லட்சம் குழந்தைகள் அனாதை ஆக்கப்படுவார்கள். இந்த நோய் தொற்று மேலும் அதிகரிக்கும். அமெரிக்க அரசு முடிவை மாற்றி கொள்ளாவிட்டால் ஏராளமான மக்கள் உயிர்கள் பறிபோகும். எந்த ஒரு அரசினுடைய கொள்கைகளை விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்ல. எனவே எய்ட்ஸ் திட்டத்துக்கான நிதியை திடீரென நிறுத்தக்கூடாது. டிரம்பின் இந்த அறிவிப்பால் எய்ட்ஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன ’’ என்றார்.