அலங்காநல்லூர்: மதுரை: கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்று (பிப். 11), நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. போட்டிகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள், 12 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், சுமார் 800 முதல் 1,000 காளைகள் வரையே அவிழ்க்கப்பட்டன. இதை சரி செய்யும் வகையில் தொகுதிவாரியாக உள்ள காளைகளை இங்கு பங்கேற்க செய்வோம் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்திருந்தார். இதன்படி அலங்காநல்லூர் அருகே உள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து சோழவந்தான் தொகுதி சார்பில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.