புதுடெல்லி: சிறப்பு ஐடி சலுகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் ரூ.29 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சம்பாதித்த வருவாய் மற்றும் அங்கு செய்யப்பட்ட முதலீடு குறித்து கணக்கில் காட்டி வருமானவரித்துறை சார்பில் நம்பிக்கை முதலில் என்ற புதிய பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்த புதிய பிரசாரத்தின் ஒருபகுதியாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி வரி செலுத்தும் முக்கிய நபர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சொத்து பட்டியல் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை சரியாக பிரதிபலிக்கும் வகையில் வருமான வரி வருமானத்தை திருத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் 24,678 வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆர்களை மதிப்பாய்வு செய்ததாகவும், 5,483 வரி செலுத்துவோர் 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான தாமதமான வருமானத்தை தாக்கல் செய்ததாகவும், அதில் அவர்கள் ரூ. 29,208 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் கூடுதலாக ரூ. 1,089.88 கோடி வெளிநாட்டு வருமானம் இருப்பதாக காட்டியுள்ளனர்.
இதனால் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை வெளிப்படுத்தி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 2024-25ல் 2,31,452ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 125 நாடுகள் இந்திய வரி அதிகாரிகளுடன் சொத்து பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.