இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் இயக்கப்படும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகை வாகனங்கள், ஆன்லைன் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் என மொத்தம் 88,859 வாகனங்களில் விவரங்களை போக்குவரத்து துறையிடம் இருந்து பெற்று, ஒவ்வொரு வாகனத்திற்கு தனித்தனி கியூ ஆர் கோடு தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாகனத்தில் ஒட்டும் பணி கடந்த 7ம் தேதி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
கியூஆர் கோடு திட்டம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: இத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த 3 நாட்களில் ஆட்டோ உள்ளிட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை வாகனங்களுக்கு ‘கியூஆர்’ கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த பணியை நாங்கள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறோம். ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து வாடகை வாகனங்களிலும் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும். சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசார் இந்த பணியை செய்து வருகிறார்கள்.
சில வாகனங்களில் கியூஆர் கோடில் வாகன ஒட்டுநர்களின் செல்போன் எண்ணுக்கு பதிலாக உரிமையாளர் செல்போன் எண் உள்ளது. அப்படி மாறியுள்ள வாகனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்து உரிய நபரின் செல்போன் எண்ணை கியூஆர் கோடில் மீண்டும் பதிவேற்றம் செய்து ஒட்டி வருகிறோம். எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 100 வாகனங்களுக்கு கட்டாயம் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்ய வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிகளவில் வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.