இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பொதுவாக இத்தகைய பதவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் “ஏ” போன்ற அனைத்து இந்திய பணி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது. நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன்.
இதை சரி செய்வதற்கு பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இது UPSCக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.