வாஷிங்டன் : இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும் என அதிபர் ஜோபிடன் அறிவுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது.
இதனால் இஸ்ரேலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட அமெரிக்க ராணுவத்திற்கு ஜோபிடன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபர் கமலாஹாரீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஜோபிடன் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும் என்றும் அதிபர் பிடன் அறிவித்துள்ளார். காசா, லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமேரிக்கா ஆதரவாக இருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இஸ்ரேலின் உள்ள இந்தியர்கள் மிகுந்த விழிப்புடனும் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பாக இருக்குமாறும் அங்குள்ள தூதரகம் கேட்டு கொண்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து, வீட்டிற்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு +972 547520711; +972 543278392 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.