சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேசம், தமிழகம் உள்பட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகள் சிறையில் கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக புகாா் தெரிவித்து மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சோ்ந்த சுகன்யா சாந்தா என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘சில மாநிலங்களின் சிறைகளில் குறிப்பிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும், தொடா் குற்ற பின்னணி உடைய நபா்களுக்கும் சிறைப் பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப், ஒடிஸா, ஜாா்க்கண்ட், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய 11 மாநில சிறைக் கையேடுகள், கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே, இந்த கையேடுகளில் இடம்பெற்றுள்ள தவறான விதிகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரியிருந்தாா்.