திஸ்புர்: அசாம் மாநிலத்தில் ஏற்கெனவே மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, மாட்டிறைச்சிக்கு முற்றிலுமாக தடை விதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான உணைவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதற்கான உரிமையை நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 21 வழங்கியுள்ளது. ஆனால் சமீப காலங்களாக குறிப்பிட்ட உணவை சாப்பிடக்கூடாது என வலதுசாரி மற்றும் மதவாத சக்திகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மாட்டுக்கறி தடை குறித்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது புதியதாக அசாம் மாநிலத்திலும் இந்த சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சியை கோயில்களுக்கு அருகில் விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கடந்த 2021ம் ஆண்டு இதற்கான சட்டத்தை அம்மாநில அரசு இயற்றியிருந்தது. இதன் மூலம் கோயில்களை சுற்றி 5 கி.மீ தொலைவுக்கு மாட்டிறைச்சியை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது.
இப்படி இருக்கையில் இந்த சட்டத்தை திருத்தி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். புதிய திருத்தம் மூலம் இனி மாட்டிறைச்சியை பொது இடங்களில் சாப்பிட முடியாது. ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், மீறுபவர்களுக்கு 3-8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும், மட்டுமல்லாது ரூ.3-5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அசாமில் வேலையிண்மை பிரச்னை, பொருளாதார வளர்ச்சியின்மை, புதிய தொழில்கள் தொடங்கப்படாதது என ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இதை பற்றி கவலைப்படாமல், அதை தீர்க்க முயலாமல் மக்களை திசை திருப்ப புதிய யுக்தியை முதல்வர் கையில் எடுத்துள்ளார். அதுதான் இந்த மாட்டுக்கறி பிரச்னை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.