மாஸ்கஸ்: உள்நாட்டு கலவரம் நடந்து வரும் சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்ததையடுத்து அதிபர் பஷர் அல் அஸாத் நாட்டை விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்களையடுத்து அங்கு கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. சிரியாவின் அதிபராக இருந்த பஷர் அல் அஸாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம்(எச்டிஎஸ்) என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தின் எதிர்ப்பை முறியடித்து நேற்று நுழைந்தனர். தலைநகர் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கிளர்ச்சியாளர்கள் தலைநகருக்குள் நுழைந்ததுமே அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதால் பஷர் அல் அஸாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது என சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து நேற்று பேட்டியளித்த சிரியா பிரதமர் முகது காஜி அல் ஜலாலி,‘‘ அதிபர் பஷர் அல் அஸாத் மற்றும் ராணுவ அமைச்சர் ஆசெப் சவ்கத் ஆகியோர் எங்கிருக்கின்றனர் என தெரியாது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்க தயார்’’ என கூறினார். பஷார் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குழுவினர் சிரிய தொலைக்காட்சியில் அறிவித்தனர். சிரியாவில் அஸாத் ஆட்சி கவிழ்ந்ததை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.ஆனால் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது ஏற்று கொள்ள முடியாதது என கூறி உள்ளன.