சியோல்: தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ மோசமாக பரவி வருகின்றது. தென்கிழக்கு நகரமான உய்சோங் காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சம்பந்தப்பட்ட பகுதியில் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றது. ஹெலிகாப்டரில் விமானி மட்டுமே இருந்ததாகவும் வேறுயாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி சுமார் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 43,330 ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளது. பழங்கால புத்த கோயில், வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் காட்டுத்தீக்கு இரையாகி உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த காட்டுத்தீ மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையே இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் நிலவி வருகின்றது. 130 ஹெலிகாப்டர், 4650 தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏராளமானோர் காட்டுத்தியை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.