காசா, உக்ரைன், சூடான், மத்திய கிழக்குப்பகுதி மோதல்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் என்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. எதிர்வரும் சவால்கள் என்ற தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள நாட்டின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். ஐநா தலைவர் அன்டனியோ குட்ரெஸ் தனது தொடக்க உரையில், ‘ நமது உலகம் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு செல்கிறது. எனவே மீண்டும் சரியான பாதையில் செல்ல நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து உக்ரைன் வரையிலும் மற்றும் சூடான் பகுதியிலும் எந்த முடிவும் இல்லாமல் பெரும் மோதல்கள் வெடித்துள்ளன.
புவிசார் அரசியல் பிளவுகள், அணுசக்தி நிலைப்பாடு மற்றும் புதிய ஆயுதங்களின் உருவாக்கம் ஆகியவற்றால் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும். எனவே வரும் சூழலில் மாற்றங்களை உருவாக்க வேண்டும்.
கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, துருக்கியின் ஜனாதிபதி தையிப் எர்டோகன், ஜோர்டானின் மன்னர் அப்துல்லா, ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரும் உலக அளவில் அதிகரித்து வரும் மோதலை குறிப்பிட்டு பேசினார்கள். அப்போது உலக அளவில் நடக்கும் மோதல்கள் மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் கூறுகையில்,’ மத்தியகிழக்குப்பகுதியில் போர்வெடித்துள்ளது. இந்த போரில் எங்களையும் இழுக்க சதி நடக்கிறது. ஆனால் நாங்கள் சண்டையிட விரும்பவில்லை.
அனைவரையும் போருக்கு இழுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தை சீர்குலைக்க விரும்புவது இஸ்ரேல் தான். நாங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அவர்கள் எங்களை இழுத்துச் செல்கிறார்கள்’ என்றார். சர்வதேச மீட்புக் குழுவின் தலைவர் டேவிட் மிலிபாண்ட் பேசுகையில், ‘1945ல் ஐ.நா நிறுவப்பட்ட சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் ‘சரிசெய்யலாம்’ என்ற கோஷத்தை முன்வைத்தார்.
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கோஷம் புறக்கணிக்கப்பட்டு போர் மேகம் சூழ்ந்துள்ளது. காசா, சூடான், உக்ரைன், லெபனானில் நடக்கும் மோதல்கள் இந்த உலகத்தை மூன்றாம் உலகப்போர் நோக்கி அழைத்துச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெருகிவரும் உலகளாவிய மனிதாபிமான தேவைகள், கட்டுப்படுத்தப்படாத மோதல்கள், தணிக்கப்படாத பருவநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் தீவிர வறுமை ஆகியவற்றை எதிர்கொள்ள உங்களிடம் என்ன திட்டம் உள்ளது. அடுத்த 80 ஆண்டுகளுக்கு ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை எவ்வாறு வலுப்படுத்துவீர்கள். இப்போது உள்ள கொள்கைகளை எப்படி பலவீனப்படுத்தாமல் இருப்பீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் அமைதி வேண்டும்: பைடன் இறுதி உரை
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் அமொிக்க அதிபராக பைடன் நேற்று இறுதி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதல்களில் அமைதி ஏற்பட வேண்டும். இந்த முயற்சியில் நாம் பின்வாங்கக்கூடாது. மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் சூடானில் 17 மாத கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேவையைப் பற்றி பேச வேண்டும்.
வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க அழிவை நான் பார்த்திருக்கிறேன். இன்று பலர் உலகைப் பார்க்கிறார்கள், கஷ்டங்களைப் பார்க்கிறார்கள், விரக்தியுடன் நடந்துகொள்கிறார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. உலகம் ஒன்றாகச் செயல்படும்போது, பலமாக இருக்கிறோம். எனவே அனைத்து இடங்களிலும் அமைதி வேண்டும்’ என்றார்.