ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில், 72 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ம் தேதி மரணமடைந்ததையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 7ம் தேதி அறிவித்தது. அதிமுக, பாஜ, தேமுதிக போட்டியிடவில்லை. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரம் கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக ஈரோடு எஸ்கேசி சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும், மாதிரி வாக்குச்சாவடியாக ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இளைஞர்கள் வாக்களிக்க ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பாலசுப்ராயலு வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் அமைக்கப்பட்டிருந்தது. 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் முன்னதாக அதிகாலை சுமார் 5.45 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சரியாக காலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணி வரை கூட்டமின்றி வெறிச்சோடி இருந்த வாக்குச்சாவடிகளில், காலை 9 மணிக்கு பிறகு கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு முடிந்த 6 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது. இங்கு நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.