தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய வரும் 22ம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

Naveen Patnaik accepts Stalin's invitation to attend Oppn meet on delimitation - Hindustan Times

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள கடந்த 5ம்தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை கூட்டினார். இக்கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த 58 கட்சிகள் கலந்து கொண்டன. அக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, இப்பிரச்னையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பாஜ அல்லாத 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மார்ச் 22ம் தேதி இதுதொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தல்படி திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கொண்ட குழு பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ளது. அதன்படி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச நேற்று புவனேஸ்வர் சென்றனர். அங்கு, ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்தனர்.

அப்போது, தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும், அதை எதிர்த்து ஒருங்கிணைந்து போராடுவது குறித்தும், கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதுதொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தையும் கொடுத்தனர். ெதாடர்ந்து தயாநிதி மாறன் எம்பி அளித்த பேட்டியில், ‘தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்கள் தொகுதி வரையறையால் நேரடியாகப் பாதிக்கும்.

இந்த மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும். அதேநேரம் வடமாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி வளர்ச்சியை நோக்கிய மாநிலங்களாக உள்ளன. தற்போது அதற்கான விலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

அவர் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார். அதேபோன்று அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி அப்துல்லா ஆகியோர் இன்று கர்நாடகா மாநிலத்திற்கு சென்று அம்மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடுத்து சொல்ல இருக்கின்றனர். அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ எம்பி ஆகியோர் நாளை தெலங்கானா செல்ல இருக்கின்றனர். அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பேசுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *