நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டது. இதிலிருந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த அனல்மின் நிலையம் ஜெர்மன் மற்றும் ரஷ்யா தொழில்நுட்பங்களுடன் கூடிய பொறியாளரால் வடிவமைக்கப்பட்டது.
இந்த அனல் மின் நிலையத்திற்கு 22 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தகைய அனல்மின்நிலையம் ஒரு சில முறை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. உலக அளவில் ஒரு அனல்மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்க கூடாது என வரையரை செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, மத்திய பசுமை தீர்ப்பாயம் ஆயுட்காலம் முடிந்த நிலையில் முதலாவது என்.எல்.சி அனல்மின்நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிட்டது.
அதன் பேரில் நெய்வேலி என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்டது.இந்த அனல்மின் நிலையத்தை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தியை ஈடு செய்யும் வகையில் புதிய அனல்மின் நிலையம் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி துவங்கியது. இடிக்கும் பணி நடைபெறுவதால் முதல் அனல்மின்நிலைய பகுதிக்கு தொழிலாளர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.